இறைவன் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருள முடியாது என்பதற்காகவே, தாய் வடிவில் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி பெண்ணை இறைவனுக்கு சமமாக போற்றுகிறார்கள். பெண் என்பவள் நடமாடும் தெய்வமாக, பாசம் மிகுந்த அன்னையாக, அன்பு மனையாளாக, பிரியமான சகோதரியாக, ஆசை மகளாக, உற்ற தோழியாக என அனைத்து நிலையிலும் உயர்ந்த மதிப்புடன் போற்றப்படுகிறாள்.
மஹாகவி பாரதி, பெண் என்பவள் யாருக்கும் அடிமை இல்லை; சமூகத்தில் தலை நிமிர்ந்து ஒளிரும் மிகப்பெரும் ஜோதி என குறிப்பிடுகிறார்.
“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா… பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என பெண்மையின் பெருமையை அழகாக எடுத்துரைத்தார்.
மேலும்…
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” என்று பெண்மையின் மாண்பினை போற்றுகிறார்..
பாரத நாட்டின் ஆன்மிக தத்துவ ஞானத்தை, உலக அளவில் உணர்த்திய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பெண்மையை போற்றியவர்களில் தலைசிறந்து விளங்குகிறார். தன்னை விரும்பிய 20 வயது பெண்ணிடம் தன்னை 25 வயது மகனாக ஏற்க அவரிடம் சுவாமிஜி வலியுறுத்தவே அந்தப் பெண் சுவாமிஜியிடம் மன்னிப்பு கோரினார்.
வேத காலம் தொடங்கி புராண காலம், சரித்திர காலம், சங்க காலம் என்று தொடர்ந்து இந்த நூற்றாண்டு வரை எண்ணற்ற பெண்மணிகள் பல துறைகளில் சிறந்து விளங்கி நம் சமுதாயத்திற்கும், இந்த தேசத்திற்கும் வழிகாட்டியாய் இருந்துள்ளனர்.
பாரதீயப் பெண்மணிகள் பற்றிய பல நுணுக்கமான, பெருமிதம் வாய்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்நூல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.