இந்த நூல் வரிசை…
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு!
பாரத புண்ய பூமிக்கும், அதன் கலாச்சார செழுமைக்கும் பண்பெனும் அணிகலனாய் அலங்கரித்து அழகு சேர்க்கும் தர்மம் மிகு தமிழகம்.
நீண்ட நெடிய வரலாற்றினைத் தன்னகத்தே கொண்டு, வீரமும், ஞானமும், பக்தியும், கலையும், சேவையும், நல்லொழுக்கமும், தர்மமும் நிறைந்த தமிழக மண்ணின் அடையாளமாக நின்று, பாரத தேசத்திற்கு பெருமைகள் சேர்த்த, எத்தனையோ மேன்மக்கள் வாழ்ந்த வாழ்க்கை நமக்கெல்லாம் வழிகாட்டி வருகிறது.
‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க…
ஊர்நலத்துக்காக தவம் செய்தவர்கள்,
ஊரைக் காக்கப் போர் புரிந்தவர்கள்,
ஊரில் பண்பாளர்கள் பலர் ஆகிட பாடுபட்ட ஆசிரியப் பெருமக்கள்,
சிற்பம், சித்திரம், சங்கீதம், இலக்கியம் என்று கலை வழி நிறைவாழ்வு வாழ்ந்து ஊரில் மக்களுக்கு மனநிறைவு வழங்கியவர்கள், கைவினைஞர்கள்,
அறிவியலில் சிறந்து விளங்கி அதன்வழி ஊரில் மேம்பாடு கண்டவர்கள்,
ஆண்கள், பெண்கள் என்று அனைத்து துறையிலும் சாதனை படைத்த சான்றோர்கள்,
இளவயதிலேயே செயற்கரிய செய்த இனிய செல்வன் / செல்விகள்,
என பண்பும் பயனும் உள்ள வாழ்க்கை வாழ்ந்த இவர்களைப் போன்றோரின் வரலாற்றை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர், அறிந்து கொள்வது அவசியம்.
இந்த சீரிய லட்சியத்துடன், சிறிய அளவில், ஆனால் சிந்தையில் பதியும் தமிழில் வெளியாகிறது தமிழகம் தந்த தவப்புதல்வர்கள் நூல் வரிசை.