‘மகோன்னதமான சரித்திர நிகழ்வுகளைக் கொண்ட தொன்மைமிகு பாரத தேசத்தின் வரலாற்றுத் தகவல்கள், அதன் பெருமைகள் கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கத்திய கல்விமுறையினால், இம்மண்ணின் மைந்தர்களுக்கு சொல்லப்படாமலேயே மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் வந்தன. சுதந்திர பாரதத்திலும் இந்நிலை தொடர்ந்தது நம் துரதிர்ஷ்டமே.
இந்த அவலத்தை துடைத்தெறிந்து, தனது எழுத்தெனும் கூர்முனையால் மக்களை விழிப்படையச் செய்தவர்தான் ஸ்வதந்த்ரவீரர் விநாயக தாமோதர சாவர்க்கர்.
அவரின் எண்ணப் ப்ரவாகத்தில் உருவான எழுத்துக் காவியம்தான் மராட்டியில் அவர் எழுதிய ‘பாரத இதிஹாசதீலே சஹ சோனேரி பானே’ என்ற உணர்ச்சிமயமான படைப்பு. பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், தமிழிலும் 1990ல் வரலாற்றுப் பேராசிரியரான திரு. அண்ணாமலை அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. இனி வரும் தலைமுறையினரும் படித்து பயன்பெற வேண்டி 30 வருடங்களுக்குப் பிறகு இதன் ஆங்கில நூலைத் தழுவி மீண்டும் தமிழாக்கம் செய்ய விஜயபாரதம் பிரசுரம் முனைந்ததன் விளைவே இந்த மறு மொழியாக்க நூல்.
இலக்கியச் சுவையுடன், மொழி ஆளுமையுடன், இனிய தமிழில், எளிய நடையில், தனக்கே உரிய சொல்லாடலுடன் மூல நூலின் கருத்தாக்கத்திலிருந்து சிறிதும் பிறழாமல் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு. பத்மன் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றிகள் பல. அவரின் இந்த சீரிய இலக்கியப் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
தேனோடு கலந்த தெள்ளமுது போன்று எழுத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக நேர்த்தியான ஓவியங்கள் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு. மிகக் குறுகிய காலத்தில், தன் தூரிகையினால் ஒப்பற்ற ஓவியங்களைப் படைத்து இந்நூலின் ஜொலிப்பை மேலும் மிளிரச் செய்திருக்கிறார் ஓவியர் சதாசிவம். அவரது அர்ப்பணிப்பு கலந்த திறமைக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்நூலிற்கு ஏற்றமிகு அணிந்துரையும், எழுச்சிமிகு அறிமுகவுரையும் நல்கிய திரு. மாலன் மற்றும் திரு. அரவிந்தன் நீலகண்டன் ஆகியோருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்.
மேலும் இந்நூல் உருவாக்கத்திற்கு நம்முடன் இணைந்து பணி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் விஜயபாரதம் பிரசுரம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் பல.